மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் முறையீடு
மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் முறையீடு
ADDED : மே 15, 2025 09:39 PM
இந்தியா கேட்:கட்டண உயர்வு பிரச்னைக்கு மத்தியில், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் 102 பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பள்ளியை அரசு கைப்பற்ற உத்தரவிடக்கோரினர்.
துவாரகா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் உள்ளது. கூடுதல் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம், அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்த என்.சி.பி.சிஆர்., எனும் தேசிய குழந்தைகள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், சம்பந்தப்பட்ட பள்ளி மீது குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி துணை காவல் ஆணையருக்கு கடந்த ஆண்டு 18ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முந்தைய விசாரணையின்போது, என்.சி.பி.சிஆர்., உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் நேற்று இந்த பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் 102 பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
அங்கீகரிக்கப்படாத கட்டணங்களை செலுத்தும்படி எங்கள் குழந்தைகள் தொடர்ந்து கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
ஆசிரியர்களை விட குழந்தைகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பள்ளியில் பவுன்சர்களை நியமித்து, ஆரோக்கியமற்ற, அழுக்கான மனிதாபிமானமற்ற நடைமுறைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மாநில கல்வித்துறை பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் பள்ளி நிர்வாகம் பின்பற்றுவதில்லை. இதுதொடர்பாக துணைநிலை கவர்னர் அலுவலகத்திலும் முறையிட்டுள்ளோம்.
பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி விகாஸ் மகாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 50 சதவீதத்தை டிபாசிட் செய்யுமாறு பெற்றோருக்கு நீதிபதி பரிந்துரைத்தார். இதை பெற்றோர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.