ரூ.6 லட்சம் சேமிப்பை தர மறுத்த மகளை கொன்ற பெற்றோர்
ரூ.6 லட்சம் சேமிப்பை தர மறுத்த மகளை கொன்ற பெற்றோர்
ADDED : ஜன 18, 2024 01:23 AM
ராம்கார், வங்கியில் இருந்த 6 லட்சம் ரூபாயை எடுத்து தர மறுத்ததால், பெற்றோரே மகளை கொன்று துாக்கில் தொங்க விட்ட கொடூர சம்பவம் ஜார்க்கண்டில் அரங்கேறிஉள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தின் பதானிநகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் மாதோ. இவருக்கு குஷி குமாரி, 17, என்ற மகள் இருந்தார்.
இவரது வங்கிக் கணக்கில், 6 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக சேமித்து வைத்திருந்தார்.
அந்த பணம் முதிர்ச்சி அடைய இருந்த நிலையில், வங்கியில் இருந்து பணத்தை உடனே எடுத்து தரும்படி குஷி குமாரியிடம் மாதோ மற்றும் வளர்ப்பு தாய் பூனம் தேவி ஆகியோர் கேட்டுஉள்ளனர்.
அவர் பணத்தை எடுத்து தர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதோ, பூனம் தேவியுடன் சேர்ந்து கடந்த 13ல் குஷியை கொலை செய்தார். பின், உடலை துாக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர்.
இது தொடர்பாக குஷியின் சகோதாரருக்கு சந்தேகம் எழுந்தது.
போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
தந்தை மாதோ, வளர்ப்பு தாய் பூனம் தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.