ADDED : மார் 05, 2024 06:56 AM
துமகூரு: துமகூரு மாவட்டத்தில், தங்கள் குழந்தைகளை பெற்றோரே ஒதுக்கித் தள்ளும் சம்பவங்கள் நடந்துள்ளன.
துமகூரு மாவட்டத்தில், பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், 129 குழந்தைகளை பெற்றோர், தங்களுக்கு தேவையில்லை என, மருத்துவமனைகளில் தவிக்கவிட்டு ஓடியுள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணியர், குழந்தை பிறந்த பின் அதை மருத்துவமனையில் தவிக்கவிட்டு, ஊழியர்களுக்குத் தெரியாமல் தப்பி ஓடிவிடுகின்றனர்.
டாக்டர்களோ, மருத்துவமனை ஊழியர்களோ குழந்தைகள் நலன் பாதுகாப்பு கமிட்டிக்கு தகவல் தெரிவித்து, குழந்தையை ஒப்படைக்கின்றனர்.
குழந்தையின் பெற்றோர் மனம் மாறி வருவர் என, இரண்டு மாதங்கள் வரை அதிகாரிகள் காத்திருப்பர். வராவிட்டால் அவர்களை கண்டுபிடித்து, கவுன்சலிங் கொடுப்பர். ஒருவேளை குழந்தையை கொண்டு செல்ல, பெற்றோர் விரும்பா விட்டால், மற்றவருக்கு தத்து கொடுக்கின்றனர்.
இது தொடர்பாக, சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:
பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமல் ஆண்களுடன் சேர்ந்து வாழும் பெண்கள், கணவரை பிரிந்து கள்ளத்தொடர்பால் கர்ப்பமடைந்த பெண்கள், சமுதாயத்துக்கு பயந்து, குழந்தையை விலக்கி வைக்கின்றனர்.
வறுமையால் வளர்க்க முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளை மருத்துவமனையில் விட்டு செல்கின்றனர்.
கடந்த 2019ல், 35 குழந்தைகள், அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவது ஆறுதலான விஷயம். ஆண் - பெண் என்ற பாகுபாடு இல்லாமல், தங்கள் குழந்தைகளை பெற்றோரே அனாதைகளாக்குவது வருத்தமளிக்கிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 'அன்பு தொட்டில்' என்ற பெயரில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு வேண்டாம் என்றால், இந்த தொட்டிலில் குழந்தையை பெற்றோர் வைக்கலாம்.
2022ல் குனிகல்லில், இரண்டு குழந்தைகள் அன்பு தொட்டிலில் வைக்கப்பட்டன. கருணை இல்லத்தில் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

