10 மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள்கள் நிறுத்த அனுமதி
10 மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள்கள் நிறுத்த அனுமதி
ADDED : நவ 09, 2024 03:30 AM
பெங்களூரு: புதியதாக 10 மெட்ரோ ரயில் நிலையங்களில், தங்கள் சைக்கிள்களை பயணியர் நிறுத்த அனுமதி அளிப்பதாக பெங்களூரு மெட்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரில் பலர், தங்கள் பகுதியிலிருந்து ரயில் நிலையத்திற்கு சைக்கிளில் வந்து, சைக்கிளை ரயில் நிலையத்தில் விட்டு பணிக்குச் செல்வது வழக்கம்.
கடந்த ஜூனில், பெங்களூரில் 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கள் சைக்கிள்களை பயணியர் நிறுத்தும் வசதி துவங்கப்பட்டது. எலச்சனஹள்ளி, கோனனகுன்டே கிராஸ், சுவாமி விவேகானந்தர் சாலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சைக்கிள் பயன்பாடு, 113 சதவீதத்தை எட்டியது.
இதைத் தொடர்ந்து சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், டி.யு.எல்.டி., எனும் நகர்ப்புற நிலப் போக்குவரத்து இயக்குனரகம், பெங்களூரு நம்ம மெட்ரோ நிர்வாகத்துடன் இணைந்து, 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியர், தங்கள் சைக்கிள்களை நிறுத்துவதற்கு புதியதாக இடம் ஒதுக்கி உள்ளது.
கெங்கேரி பேருந்து முனையம், கே.ஆர்.புரம், மாதவரா, சிக்கபிதரகல்லு, மஞ்சுநாதா நகர், தாசரஹள்ளி, நேஷனல் கல்லுாரி, பனசங்கரி, ஜெ.பி., நகர் மற்றும் சில்க் இன்ஸ்டிடியூட் ஆகிய மெட்ரோ நிலையங்களில் சைக்கிள்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்கும், பசுமையான வழியில் பயணம் செய்வதற்கும் சைக்கிள்கள் பயன்படுகின்றன.