ADDED : ஏப் 21, 2026 02:06 AM

புதுடில்லி: டில்லியில், அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பான தகராறில், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த பங்கஜ் நாயர், 34, என்பவர், தலைநகர் டில்லியின் ப்ரீத் விஹார் என்ற பகுதியில் வசிக்கும் தன் சகோதரர் பராஸ் நாயரை சந்திக்க, அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை காரில் வந்தார்.
அப்போது, வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக, பராஸ் நாயரின் பக்கத்து வீட்டுக்காரரான கவுரவ் சர்மாவுக்கும், பங்கஜ் நாயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு சொகுசு கார்களை கவுரவ் சர்மா வைத்துள்ளார்.
எனினும், அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு காரை நிறுத்தவே அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மற்றொரு காரை நிறுத்துவது தொடர்பாக, கவுரவ் சர்மா - பங்கஜ் நாயர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த கவுரவ் சர்மா, மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பங்கஜ் நாயரை சுட்டு விட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அவரது சகோதரர் பராஸ் நாயர் மருத்துவமனையில் சேர்த்தார்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், தலைமறைவான கவுரவ் சர்மாவை தேடி வருகின்றனர்.
