பார்லி., நிலைக்குழு தலைவர்களாக கனிமொழி, சிவா நியமனம்
பார்லி., நிலைக்குழு தலைவர்களாக கனிமொழி, சிவா நியமனம்
ADDED : செப் 28, 2024 03:41 AM
புதுடில்லி: தி.மு.க., -- எம்.பி.,க்கள் கனிமொழி, சிவா ஆகியோர் பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர்களாகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று 100 நாட்களை கடந்த நிலையில், பார்லிமென்ட் நிலைக்குழு அமைப்பதில் தாமதம் நிலவி வந்தது.
இந்நிலையில், 24 துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், ராணுவ விவகாரங்களுக்கான கமிட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., -- எம்.பி.,க்களான கனிமொழி, உணவு மற்றும் பொது வினியோகத் துறைக்கான நிலைக்குழு தலைவராகவும், தொழில் துறை மற்றும் நுகர்வோர் விவகாரத் துறைக்கான குழுவின் தலைவராக சிவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள், முக்கிய துறைகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சோனியாவுக்கு, நிலைக்குழுவில் இடம் அளிக்கப்படவில்லை. பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத், தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.