UPDATED : ஜூன் 24, 2024 11:18 AM
ADDED : ஜூன் 24, 2024 12:06 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின், முதல் முறையாக இன்று பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியது. பிரதமர் மோடி உள்பட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். முன்னதாக தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பொறுப்பேற்றார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
லோக்சபாவுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டுஉள்ளது. இன்றும், நாளையும், எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுதினம், 18வது லோக்சபாவின் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. புதிய லோக்சபாவின் முதல் கூட்டம் என்பதால், 27ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
பதிலளிப்பார்
அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடக்கும். இதற்கிடையே, பிரதமர் மோடி தன் அமைச்சரவையை பார்லிமென்டில் அறிமுகம் செய்வார். இறுதியில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, 22ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.
இந்த லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதனால், இந்தக் கூட்டத் தொடரில் வாத, விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஏழு முறை எம்.பி.,யான பார்த்துஹரி மஹதப் நியமிக்கப்பட்டுள்ளார். எட்டு முறை எம்.பி.,யான காங்கிரசைச் சேர்ந்த கே.சுரேஷை நியமிக்காததற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பதவி பிராமணம்
இடைக்கால சபாநாயகருக்கு உதவும் வகையில், ஒரு குழுவையும் ஜனாதிபதி அமைத்துள்ளார். இதில், காங்கிரசின் கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க.,வின் பாலு, பா.ஜ.,வின் ராதா மோகன் சிங், பாகுன் சிங் குலஸ்தே, திரிணமுல் காங்.,கின் சுதிப் பந்தோபாத்யாய் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், இந்த பொறுப்பை ஏற்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திரிணமுல் எம்.பி., சுதிப் பந்தோபாத்யாயை நேற்று இரவு சந்தித்து பேசினார்.