8வது நாளாக பார்லிமென்ட் முடக்கம் : அத்வானியுடன் பிரணாப் சந்திப்பு
8வது நாளாக பார்லிமென்ட் முடக்கம் : அத்வானியுடன் பிரணாப் சந்திப்பு
ADDED : செப் 06, 2011 11:42 PM

புதுடில்லி: குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தால், நேற்று, எட்டாவது நாளாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடங்கின. அதேநேரத்தில், இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று சந்தித்துப் பேசினார். குஜராத் லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கான நீதிபதியை, அம்மாநில கவர்னர் கமலா பெனிவால் நியமித்துள்ள விவகாரம், கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை பார்லிமென்டில் வெடித்தது. அன்றிலிருந்து, பார்லியின் இரு சபைகளையும் பா.ஜ., எம்.பி.,க்கள் ஸ்தம்பிக்க செய்து வருகின்றனர். தினந்தோறும், இரு சபைகளும் ஒத்தி வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்றும் பார்லிமென்டில் குஜராத் விவகாரம் வெடித்தது. இரு சபைகளும் முற்றிலுமாக ஸ்தம்பித்தன. இதனால், எட்டாவது நாளாக சபை நடவடிக்கைகள் முடங்கின. இருந்தாலும், ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிசா என மாற்றம் செய்வதற்கான மசோதா, பலத்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், லோக்சபாவில் நிறைவேறியது. அதன்பின்னர் வழக்கம்போல், சபை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் இதேபோல் ஒத்திவைக்கப்பட்டது.
அத்வானியுடன் பிரணாப் சந்திப்பு: குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தால், பார்லிமென்டில் முட்டுக் கட்டை நிலைமை தொடர்வதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அத்வானியை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று சந்தித்துப் பேசினார்.
பார்லிமென்ட் வளாகத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, 'குஜராத் லோக் ஆயுக்தா விவகாரம் தொடர்பாக சில யோசனைகளை அத்வானி என்னிடம் தெரிவித்துள்ளார்' என்றார். வேறு விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார். அதேநேரத்தில், பிரணாப் முகர்ஜி உடனான சந்திப்புக்குப் பின், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருடன் ஆலோசித்தார். 'குஜராத் லோக் ஆயுக்தா விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, கவர்னரால் நியமிக்கப்பட்ட நீதிபதியை நீக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அப்படி நீக்கி விட்டால், கவர்னர் கமலா பெனிவாலை திரும்ப அழைக்கும்படி, பா.ஜ., வற்புறுத்தாது' என்றும், அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியுடன் காங்., தலைவர்கள் சந்திப்பு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா தலைமையிலான, அம்மாநில காங்கிரஸ் குழுவினர், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, 'குஜராத் மாநில கவர்னரை எந்த சூழ்நிலையிலும் நீக்கக் கூடாது. அவர் சிறப்பான பணியைச் செய்துள்ளார். லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தில், பார்லிமென்டை தவறாக வழிநடத்திச் செல்ல பா.ஜ., முற்பட்டுள்ளது.' என்றனர்.
நமது டில்லி நிருபர்