UPDATED : செப் 20, 2024 11:56 AM
ADDED : செப் 18, 2024 11:43 PM

புதுடில்லி : பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லோக்சபா, மாநில சட்டசபைகள், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துக்களை பெற்றது. இதன் அடிப்படையில் தன் அறிக்கையை, இந்தக் குழு, கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வும் தன் தேர்தல் வாக்குறுதிகளில், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. சமீபத்தில் சுதந்திர தின உரையின்போதும், பிரதமர் நரேந்திர மோடி இதை வலியுறுத்தினார்.
எதிர்பார்ப்பு
'பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்குள் இதை நடைமுறைப்படுத்துவோம்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒரே நாடு - ஒரே தேர்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவங்கும். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரிலேயே, இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
இத்திட்டத்தைச் செயல்படுத்தவது தொடர்பாக, நாடு முழுதும் அடுத்த சில மாதங்களில் விரிவாக விவாதிக்கப்படும்.
இந்த முறைக்கு பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்; ஒரு சில கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் இந்த முறை குறித்து விரிவாக விவாதிப்போம். அனைத்து தரப்பினரின் முழு ஆதரவைப் பெற முயற்சிப்போம். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகே, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
இந்த ஆட்சியின் பதவி காலத்துக்குள் இதை நடைமுறைப்படுத்துவோம் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கூறியுள்ளார். அதனால், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுமா என்பதை தற்போது கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல்
ஒரே நாடு - ஒரே தேர்தல் குழு அளித்துள்ள பரிந்துரைகளில், இரண்டு கட்டங்களாக இதை செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
முதலில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்திலும், அது முடிந்த 100 நாட்களில், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என, கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுதும் ஒரே பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது தலைமை தேர்தல் கமிஷனும், உள்ளாட்சித் தேர்தல்களில், மாநில தேர்தல் கமிஷன்களும் வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றன.
இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையில், அரசியலமைப்புச்சட்டத்தில், 18 திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவற்றுக்கு, மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை. அதே நேரத்தில், பெரும்பாலான திருத்தங்களுக்கு பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கிடையே சட்டக் கமிஷனும், ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான தன் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டக் கமிஷனின் தகவலின்படி, 2029ல் இருந்து இதை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தொங்கு சட்டசபை அமைந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்படும்.
தேர்தல் நடக்க வேண்டிய மாநிலங்கள்
நம் நாட்டில், 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், பல்வேறு காரணங்களில் தேர்தல் நடைபெறும் காலம் மாறியது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது மிகப் பெரும் சவாலானது. சில மாநிலங்கள், அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக தேர்தலை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் சில மாநிலங்களில் பதவிக் காலம் முடிந்தப் பிறகும், சிறிது காத்திருக்க நேரிடும்.
லோக்சபாவுக்கு மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கும். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது, ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலும் நடந்தது.
தற்போது ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்கள், இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளன.
டில்லி, பீஹாரில், 2025ல் தேர்தல் நடக்க உள்ளது. அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டசபைகளின் பதவிக் காலம், 2026ல் முடிகிறது. கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் சட்டசபைகளின் பதவிக் காலம், 2027ல் முடிகிறது.
ஹிமாச்சல், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, தெலுங்கானாவில், 2028லும், லோக்சபா மற்றும் அதனுடன் தேர்தல் நடந்த மாநிலங்களில், 2029லிலும் பதவிக் காலம் முடிகிறது.
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்துக்கான உயர்மட்டக் குழுவை வழிநடத்திய
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன். நம் ஜனநாயகத்தை துடிப்பாக மாற்ற, இது ஒரு
முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி.
- நரேந்திர மோடி, பிரதமர்
ஒரே
நாடு; ஒரே தேர்தல் நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லும்.
பிரதமர் மோடியின் திடமான எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. இதன் வாயிலாக, நம்
ஜனநாயகம் துாய்மைப்படுத்தப்படும். தேர்தல் செலவீனங்கள் குறைக்கப்பட்டு, இதர
திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கூடிய சூழல் ஏற்படும். இது, நம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.
- அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஒரே
நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை மதிப்பிட அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில்
இடம்பெற்றிருந்த, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,
கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.சி.குப்தா, சென்னை உயர்
நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
இவர்கள் குறிப்பிடுகையில், 'இந்த திட்டம், மாநில
அளவில் ஆட்சி அமைப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தும். இதுதவிர, ஜனநாயக முறையை
சிதைப்பதுடன் அதன் கோட்பாடுகளுக்கு எதிரானது' என, குறிப்பிட்டனர்.
தமிழக
முன்னாள் தேர்தல் கமிஷனர் வி.பழனிகுமார் குறிப்பிடுகையில், ''ஒரே நாடு;
ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தல் காலங்களில் உள்ளூர்
பிரச்னைகளை விட தேசிய பிரச்னைகள் மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இது, மாநில அரசுகளை மழுங்கடிக்கக்கூடிய செயல்,'' என,
சுட்டிக்காட்டியுள்ளார்.