வக்ப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பார்லிமென்ட்
வக்ப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பார்லிமென்ட்
UPDATED : ஏப் 05, 2025 07:14 AM
ADDED : ஏப் 05, 2025 02:27 AM

புதுடில்லி : ராஜ்யசபாவில், 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த மசோதாவுக்கு, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.
முஸ்லிம்கள் தானமாக வழங்கும் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ப் வாரிய சட்டங்களில், பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப் திருத்த மசோதா - 2025 லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேறியது.
ஓட்டெடுப்பு
லோக்சபாவில் கடந்த, 2ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13 மணி நேர விவாதத்துக்குப் பின் ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக, 288 ஓட்டுகளும், எதிர்ப்பாக 232 ஓட்டுகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின், 128 ஆதரவு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியது. 95 பேர் எதிர்த்து ஓட்டுபோட்டனர்.
இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வக்ப் திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
நம் அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் உறுதியாக எதிர்ப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல தவறுகள்
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது என்ற உணர்வு நாட்டில் நிலவுகிறது.
''லோக்சபாவில் 288 ஆதரவு, 232 எதிர்ப்பு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியதில் இருந்தே, அதில் பல தவறுகள் இருப்பது உறுதியாகிறது. இந்த மசோதா சரியானதாக இருக்கலாம்; யாருக்கும் நன்மையானதாக இருக்காது,'' என்றார்.
இந்நிலையில், வக்ப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி., ஜாவேத், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் எம்.பி., அசாதுதீன் ஓவைசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

