எதிர்க்கட்சிகள் அமளி; பார்லிமென்ட் தொடர் முடக்கம்!
எதிர்க்கட்சிகள் அமளி; பார்லிமென்ட் தொடர் முடக்கம்!
ADDED : டிச 02, 2024 12:43 PM

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் நாளை (டிச.,03) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு, இன்று (டிச.,02) பார்லிமென்ட் இரு அவைகளும் கூடின.
காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கூச்சலிட்டனர். தொழிலதிபர் அதானி விவகாரம், உ.பி.,யின் சம்பல் மற்றும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டனர். அமைதி காக்கும் படி, ஓம்பிர்லா பலமுறை கூறினார். எதிர்க்கட்சியினர் துளி அளவு கூட மதிக்கவில்லை. அவர் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மீண்டும் 12 மணிக்கு அவை கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், நாளை (டிச.,03) காலை 11 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். ராஜ்யசபாவிலும் இதே கதை தான். காலை 11:00 மணிக்கு சபை கூடிய சில மணி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியது.
அப்போதும், அதானி, சம்பல், மணிப்பூர் என்ற கோஷங்கள் சபை முழுதும் எதிரொலித்தன. சபை ஒழுங்கை பராமரிக்கவும், கேள்வி நேரத்தை செயல்பட அனுமதிக்கும்படியும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் கோரிக்கை விடுத்தார். அதை பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால் அவையை நாளை (டிச.,03) காலை 11 மணி வரை ஒத்திவைத்து, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார். பார்லிமென்ட் இரு அவைகளும் எந்த மசோதாவும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.