பார்லியில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
பார்லியில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
UPDATED : நவ 25, 2024 02:00 PM
ADDED : நவ 24, 2024 11:26 PM

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியது. அமெரிக்காவில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது தொடரப்பட்டுள்ள லஞ்ச வழக்கு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் எழுப்பின. இதனை தொடர்ந்து பார்லி., 2 அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு தன் அறிக்கையை கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு பதிவு
சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி விவகாரத்தை காங்., - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் எழுப்பினர். டில்லி காற்று மாசு, மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, ரயில் விபத்துகள் போன்ற முக்கிய பிரச்னைகளை இண்டி கூட்டணியினர் எழுப்பினர் .
குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கும் நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், தலைநகர் டில்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்., மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகோய், தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி பேட்டி
கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த
கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது
அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில்
ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.
ராஜ்சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே; அதானி விவகாரம் மிக முக்கியமானது . இது குறித்து விவாதிக்க வேண்டும். என்றார். இதனை திரிணாமுல் காங்., மற்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.