ஜூலை 21ல் துவங்குகிறது பார்லி., கூட்டத்தொடர்: விவாதத்துக்கு தயார் என்கிறது அரசு
ஜூலை 21ல் துவங்குகிறது பார்லி., கூட்டத்தொடர்: விவாதத்துக்கு தயார் என்கிறது அரசு
ADDED : ஜூன் 05, 2025 12:03 AM

''பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் துவங்கி, ஆகஸ்ட் 12 வரை நடக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க பார்லிமென்டில் சிறப்புக் கூட்டத்தை கூட்டும்படி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 3ல் டில்லியில் கூடிய காங்., உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணியில் உள்ள 16 எதிர்க்கட்சித் தலைவர்கள், பார்லி., சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து, 200க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினர்.
ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் ஆர்வம் காட்டாத மத்திய அரசு, 'வழக்கமான மழைக்கால கூட்டத்தொடர் சில வாரங்களில் துவங்கவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வாய்ப்பில்லை' எனக்கூறி கைவிரித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான், டில்லியில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
மழைக்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம் 21ல் துவங்கி, ஆகஸ்ட் 12ல் நிறைவு செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் இரு சபைகளிலும் விவாதிக்கப்படும்.
மத்திய அரசை பொறுத்தவரையில், அனைத்து கட்சிகளையும் அனுசரித்து செல்லவே விரும்புகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகவே ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களிடமும் பேசி வருகிறோம்.
அனைவரது ஒத்துழைப்பையும் அரசு எதிர்பார்க்கிறது. பார்லிமென்டை சுமுகமாக நடத்தி, இரு சபைகளிலும் முக்கிய அலுவல்களை விரைந்து மேற்கொள்வதில் ஒற்றுமையுடன் செயல்பட அனைவரும் முன்வருவர் என்று நம்புகிறோம். விவாதத்திற்கு அரசு தயாராகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் இந்த அவசரம்?
பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், 47 நாட்கள் முன்னதாகவே கூட்டத்தொடர் குறித்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தப்பவே, 47 நாட்கள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
- நமது டில்லி நிருபர் -