ADDED : டிச 03, 2025 07:35 AM

எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறிய போதும், அதை ஏற்காமல், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கியதால், பார்லி.,யின் இரு சபைகளும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன.
பார்லி., குளிர் கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று காலை, மகர் துவார் முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூடினர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த எம்.பி.,க்கள் சோனியா, பாலு, கனிமொழி உள்ளிட்ட பலரும் கூடி, எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபை ஒத்திவைப்பு பின், காலை 11:00 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா எவ்வளவு சொல்லியும் கேட்காத எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபடவே, கேள்வி நேரம் ரத்தாகி சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில், துணை ஜனாதிபதியும், சபை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கப் போகும் முதல் அலுவல் நாள் என்பதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
ஜீரோ நேரம் துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, ''ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு நான் பணிய மாட்டேன்,'' என, எடுத்த எடுப்பிலேயே, சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு காட்டினார்.
தி.மு.க., - எம்.பி., சிவா, ''விதி எண் - 267ன் கீழ் அளிக்கப்படும் நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
''சபையில் இப்படி கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டால் எப்படி பதிலளிக்க முடியும்?'' என, சி . பி.ராதாகிருஷ்ணன் மடக்கினார்.
அமளிக்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசியதாவது:
விதி எண் - 267ன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டால், அது குறித்த விபரங்களை சபையில் அறிவிக்க வேண்டும். எந்த பிரச்னைக்காக அந்த நோட்டீஸ் தரப்படுகிறது; அதை வழங்கிய எம்.பி.,க்கள் யார் என்ற தகவல்களை, கடந்த காலங்களில், சபை தலைவர் தெரிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது, வழக்கத்துக்கு மாறாக நீங்கள் செயல்படுவது சரியல்ல.
இன்று, உங்களுக்கு முதல் அலுவல் நாள். எனவே, உங்களை தர்ம சங்கடப்படுத்தும் விதமாக நான் பேச விரும்பவில்லை.
நீங்கள் சபை தலைவர். அனைத்து பக்கமும் பார்க்க வேண்டும். முன்பு இருந்த சபை தலைவர், எங்கள் பக்கமே பார்க்க மாட்டார். நட்டாவை மட்டுமே அவர் பார்ப்பார். தற்போது நீங்களும் அப்படித் தான் செய்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
''சபை ஒழுங்காகவும், அமைதியாகவும் இருந்தால் மட்டுமே, அனைவரது பக்கமும் பார்க்க முடியும். தற்போது நீங்கள் பேசுகிறீர்கள். நான் கேட்கிறேன். ஒழுங்கற்ற சூழலில், அது போல என்னிடம் எதிர்பார்த்தால் அது நடக்காது,'' என, சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
''சபையை சுமுகமாக நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு தானே தவிர, எங்களுடையது அல்ல. நாங்கள் பிரச்னைகளை தெரிவிக்கிறோம். எஸ்.ஐ.ஆர்., என்பது அவசரமாக விவாதிக்க வேண்டிய பிரச்னை.
''இதுவரை 28 பேர் இறந்து விட்டனர். நாட்டு நலன் கருதி, அது குறித்து இப்போதே விவாதம் நடத்த வேண்டும். நாங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்,'' என, கார்கே கூறினார்.
ஏற்புடையது அல்ல அப்போது, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
தயவு செய்து இந்த விவகாரத்தில் அரசுக்கு காலக்கெடு விதிக்க வேண்டாம். எப்போது விவாதம் நடத்தப்படும் என, எதிர்க்கட்சிகள் கேட்பதால் தான் பிரச்னையே ஏற்படுகிறது. சட்டென எதையும் செய்ய முடியாது.
தேர்தல்களில், மக்கள் தோற்கடித்து விட்டனர் என்பதற்காக, அந்த கோபத்தை இங்கு காட்டக்கூடாது.
பிரச்னை குறித்து விவாதிக்க அரசு தயார். ஆனால், இப்போதே நடத்த வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அமளி அதிகமாக, ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
மணிப்பூர்
ஜி.எஸ்.டி.,
திருத்த மசோதா
நிறைவேற்றம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மணிப்பூர் ஜி.எஸ்.டி., சட்டம் - 2017 அமலில் இருந்தது. அதை திருத்திய மத்திய அரசு, கடந்த அக்டோபரில், அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில், அதற்கு மாற்றாக, மணிப்பூர் ஜி.எஸ்.டி., திருத்த சட்டம் - 2025, பார்லி.,யில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 5 மற்றும் 18 சதவீதம் என, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விகிதங்களை இந்த மசோதா உள்ளடக்கி உள்ளது.
- நமது டில்லி நிருபர் -:

