பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கு: சித்ரவதை செய்ததாக புகார்
பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கு: சித்ரவதை செய்ததாக புகார்
UPDATED : பிப் 01, 2024 10:45 AM
ADDED : பிப் 01, 2024 02:10 AM

புதுடில்லி: பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர், இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரச் சொல்லி, டில்லி போலீசார் சித்ரவதை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்தது. டிச., 13ம் தேதி, லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த இருவர், வண்ண புகை குண்டுகளை வீசினர். இதே போல், பார்லி.,க்கு வெளியே இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்த வழக்கில், மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 'உபா' எனப்படும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், புதுடில்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர் முன், மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள், '70க்கும் மேற்பட்ட வெள்ளைத்தாள்களில் கையெழுத்திடும்படி, போலீசார் எங்களை கட்டாயப்படுத்தினர். மேலும், இந்த சம்பவத்தில், தேசிய அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரச் சொல்லி, 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்து சித்ரவதை செய்தனர்' என, நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, டில்லி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஹர்தீப் கவுர், ஆறு பேரின் நீதிமன்றக் காவலை, மார்ச் 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை பிப்., 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.