பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர்கள் அறிவிப்பு; நிதிக்கு மஹ்தாப், வெளியுறவுத்துறைக்கு சசி தரூர்!
பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர்கள் அறிவிப்பு; நிதிக்கு மஹ்தாப், வெளியுறவுத்துறைக்கு சசி தரூர்!
ADDED : செப் 27, 2024 04:26 AM

புதுடில்லி: பார்லிமென்ட் நிலைக்குழுக்களுக்கான துறை வாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பார்லிமென்டில் நிலைக்குழு தலைவர் பதவி மிக முக்கியமானது. மொத்தம் 24 துறைகளுக்கு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவில் 31 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 21 பேரை லோக்சபா சபாநாயகரும், 10 பேரை ராஜ்யசபா தலைவரும் பரிந்துரைப்பர். அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர் ஆக முடியாது.
நிலைக்குழு தலைவருக்கு, மத்திய அரசின் துறை செயலர்களை சம்மன் செய்ய உரிமை உண்டு. அரசின் சட்ட மசோதாக்களை அலசி ஆராய்ந்து, கேள்விகளும், சந்தேககங்களும் எழுப்பும் அதிகாரம் இந்த குழுவுக்கு உண்டு.
இந்நிலையில், பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
நிதித் துறைக்கான நிலைக்குழு தலைவராக பா.ஜ., எம்.பி., மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவு துறை நிலைக்குழு தலைவராக காங்கிரசின் சசிதரூர், உள்துறை நிலைக்குழு தலைவராக பா.ஜ.,வின் ராஜா மோகன் தாஸ் அகர்வால், எரிசக்தி மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்களாக சிவசேனாவின் ஸ்ரீரங் அபா பர்னெ மற்றும் தேசியவாத காங்கிரசின் சுனில் தத்கரே அறிவிக்கப்படுள்ளனர்.
நிலக்கரி, சுரங்கம் மற்றும் உலோகத் துறை நிலைக்குழு தலைவராக முன்னாள் பா.ஜ., அமைச்சர் அனுராக் தாக்குரும், கல்வித் துறைக்கான நிலைக்குழுவுக்கு காங்கிரசின் திக் விஜய் சிங்கும் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.