UPDATED : ஜூலை 22, 2024 01:19 PM
ADDED : ஜூலை 22, 2024 12:07 AM

புதுடில்லி: விருப்பு, வெறுப்புகளை கடந்து மறந்து நாட்டின் வளர்ச்சிக்கு
துணை நிற்கும் வகையில் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த
பேட்டியில் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஆக்கப்பூர்வமான பார்லி., கூட்டம் நடக்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த
கூட்டத்தை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த
நாட்டிற்காகத்தான் மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். கட்சிக்காக அல்ல.
பார்லி., கூட்டத்தை வீணாக்கக்கூடாது. கடந்தகால விருப்பு, வெறுப்புகளை,
வேறுபாடுகளை விட்டு அனைவரும் ஒன்றுபட்டு நாட்டு வளர்ச்சிக்கு துணை நிற்க
வேண்டும். அனைவருக்கும் இந்த பொறுப்பு உள்ளது.
வளரும் இந்தியாவின்
முதல் படி இன்று முதல் துவங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கான அமுதகால
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவோம். 2047 ல் இந்தியா பெரும் பொருளாதார நாடாக முன்னேற
பாடுபடுவோம். இவ்வாறு மோடி பேசினார்.
தேர்தல் முடிந்து,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது.
இதையடுத்து, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான
கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
ஆய்வறிக்கை
ஆக.,
12ம் தேதி வரை, 19 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடக்க உள்ளது.
தொடர்ந்து ஏழாவது முறையாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்
பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன், பொருளாதார ஆய்வறிக்கை
இன்று தாக்கலாகும்.
தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி
அமைந்துள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் பலமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம்
எம்.பி.,க்கள் பதவியேற்பதற்காக நடந்த கூட்டத் தொடரின்போதே, ஆளும்
தரப்புக்கு, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தன் பலத்தை காட்டியது.
கடுமையான
வாத, விவாதங்கள் அப்போது நடந்தன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து கோஷமிட்டன.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில்
எதிர்க்கட்சிகளை சமாளிப்பது ஆளும் தரப்புக்கு கடும் சவாலாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. சபையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சி
கூட்டத்துக்கு நேற்று அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ராணுவ
அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் நடந்த இந்த கூட்டத்தில்
பங்கேற்க, 44 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வழக்கமாக, பெரிய
கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால், ஒரு
எம்.பி., உள்ள கட்சிக்கு கூட இந்த முறை அழைப்பது விடுக்கப்பட்டுள்ளது
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பல்வேறு
கோரிக்கைகளை முன் வைத்தன. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு
மோசடிகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கை.
உத்தர
பிரதேசத்தில் சிவனை வழிபடும் கன்வர் யாத்திரை நடக்க உள்ளது. இந்த
யாத்திரையின்போது சாலையோரங்களில் உள்ள கடைகளில், அதன் உரிமையாளர் பெயர்,
மொபைல்போன் எண் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில்
நிலவும் வன்முறைகள், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்,
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என, பல பிரச்னைகள் குறித்து
பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தியுள்ளன.
லோக்சபா துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகள்
தரப்புக்கு அளிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின்
பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
அனைத்து பிரச்னைகள்
தொடர்பாக விவாதிக்க தயாராக உள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர்
கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அதே நேரத்தில், அமளி ஏற்படுத்தாமல்
ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என,
எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் குறிப்பிட்டார். விதிகளுக்கு உட்பட்டே
விவாதங்கள் நடத்தப்படும் என்றும், அவர் சுட்டிக் காட்டினார்.

