ADDED : ஜூலை 20, 2025 02:14 AM

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி, அடுத்த மாதம் 21 வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை துவங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார், பீஹார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவகாரமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதையொட்டி காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே, எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அவரது இல்லத்தில் அமைச்சர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மூண்ட சண்டை, தன் தலையீட்டால் தான் நிறுத்தப்பட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை சண்டையின்போது ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்டது இந்திய போர் விமானமா? அல்லது பாகிஸ்தான் போர் விமானமா? என்பதை டிரம்ப் விளக்கவில்லை.
பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நேரத்தில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் ''என்ன நடந்தது என்ற உண்மை நாட்டிற்கு தெரிய வேண்டும். இது பற்றி பார்லிமென்டில் பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.
''பார்லிமென்ட் கூடும் இந்த சமயத்தில் டிரம்ப் வீசிய ஏவுகணை, 24வது முறையாக வெடித்திருக்கிறது,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
'அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இரு நாடுகளையும் டிரம்ப் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் பாகிஸ்தானுடனான சண்டையை நம் நாடு நிறுத்திக் கொண்டதா என்பதையும் பிரதமர் மோடி விளக்க வேண்டும்' என, ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபா காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூரும் டிரம்ப் பேசிய விவகாரம் குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
''டிரம்ப் கூற்றின்படி உண்மையிலேயே ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? சண்டையை நிறுத்த சொன்னது யார்? இதில் அமெரிக்காவின் பங்கு என்ன? வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா?'' என அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சூழலில் இண்டி கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. சோனியா, ராகுல், கார்கே தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் உள்ள, 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதிலும், பார்லிமென்டில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே, டிரம்ப் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதால், பார்லிமென்ட் சுமுகமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு விவகாரங்களில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா? என்பதும் சந்தேகமே. இதனால், பார்லிமென்டை முடக்க தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் காங்., தலைமையில் எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன.
இந்த கூட்டத் தொடரில், வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா உட்பட எட்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.