சாமியாருக்கு பரோல் : காங். குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
சாமியாருக்கு பரோல் : காங். குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
ADDED : அக் 02, 2024 02:39 AM

சண்டிகர் : கடும் நிபந்தனையுடன் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு பரோல் வழங்கியதாகவும், அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என காங்., புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலடி அளித்துள்ளது.
ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முறை பரோல் பெற்று வெளியே வந்த நிலையில், மீண்டும் 20 நாள் பரோல் கேட்டு மனு செய்தார். ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்.05-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்.08-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், சாமியாரின் பரோல் மனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு ஹரியானா அரசு அனுப்பியது. ஹரியானா தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால், கூடுதல் தலைமை செயலர் பரிசீலினைக்கு பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு தேர்தல் ஆணையம் 20 நாள் பரோல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ராம் ரஹீமிற்கு பரோல் வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், இதன் பின்னணியில் பா.ஜ., உள்ளதாக காங்., குற்றம்சாட்டியது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, குர்மீத் ராம் ரஹீம் எந்த அரசியல் விவகாரங்களிலும் தலையிட கூடாது, ஹரியானாவிற்குள் நுழையக்கூடாது மீறினால் பரோல் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் நிபந்தனையுடன் பரோல் வழங்கப்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என கூறியுள்ளது.