UPDATED : டிச 11, 2024 02:38 PM
ADDED : டிச 11, 2024 12:31 AM

பதேபூர்: உத்தர பிரதேசத்தில், 185 ஆண்டுகள் பழமையான மசூதியின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது.
உ.பி.,யின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள லாலாவ்லி நகரில் பழமையான நுாரி மசூதி உள்ளது. இந்நிலையில், பான்டா - பஹ்ரைச் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பொதுப்பணித்துறையினர் நேற்று இந்த மசூதியின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர்.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மசூதியில் 65 அடி நீளமுள்ள பகுதியை புல்டோசர் வைத்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக மசூதியின் ஒரு பகுதியை இடித்து அகற்ற மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால் மசூதி நிர்வாகம் அகற்றாததால் நாங்கள் இடித்து அகற்றினோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மசூதி மேலாண்மை குழு தலைவர் முகமது மொய்ன் கான் கூறுகையில், ''நுாரி மசூதி 1839ல் கட்டப்பட்டது. மசூதியை சுற்றியுள்ள சாலை 1956ல் தான் அமைக்கப்பட்டது.
''எனினும் மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
''இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது,'' என்றார்.