ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
ADDED : செப் 08, 2025 07:53 AM

பாட்னா: பீஹார் தேர்தல் பிரசாரம் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பீஹார் சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறமும், இண்டி கூட்டணி மறுபுறமும் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களை இறுதி செய்து வருகின்றன.
தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகும் வகையில் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவது பற்றியும் அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதித்து வருகின்றன. இந் நிலையில், கடந்த தேர்தலை போல் அல்லாமல் இம்முறை ஹெலிகாப்டர்களில் பறந்து, பறந்து அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலக்க அரசியல் கட்சியினர் தயாராகி விட்டனர்.
இதற்காக தற்போதே ஹெலிகாப்டர்களை வாடகைக்கு முன்பதிவு செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டனர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக தேஜ கூட்டணியினர் 15 ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சி கூட்டணியின் அரசியல் தலைவர்களும் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டர்களில் வலம் வர முன்பதிவில் இறங்கி இருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் 2 ஹெலிகாப்டர்களை முழுநேர தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டரின் வாடகை என்பது ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என்றும், இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு வாடகை ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என்றும் அதை வாடகைக்கு விடுவோர் கூறி உள்ளனர்.
இதுகுறித்து ராஷ்டிரிய தலைவர் ராஜேஷ் யாதவ் கூறியிருப்பதாவது; எங்கள் கட்சியின் தலைவர்கள் குறைந்த அளவே செலவு செய்து போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். லாலு பிரசாத் சாதாரண ஜீப்பில் பயணிப்பார். ஹெலிகாப்டர்களில் பறக்க எங்கள் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. தேஜஸ்விக்கு இளைய சமுதாயத்தினர் ஆதரவு இருக்கிறது.
குறுகிய நேரத்தில் அதிக இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய முடியும் என்பதால் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துவோம் என்று கூறினார்.
பாஜ செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா கூறுகையில், முடிந்த வரை பல்வேறு தொகுதிகளில் வலம் வந்து பிரசாரத்தை எளிதாக்க ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன என்றார்.