சிக்கபல்லாபூரில் வாகை சூடும் தலைவிகளை கண்டுகொள்ளாத கட்சிகள்
சிக்கபல்லாபூரில் வாகை சூடும் தலைவிகளை கண்டுகொள்ளாத கட்சிகள்
ADDED : பிப் 22, 2024 11:14 PM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில், பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும், சீட் எதிர்பார்க்கும் தலைவர்களில் ஒரு பெண் கூட இல்லை.
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ. மற்றும் காங்கிரஸ் சீட்டுக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது. சீட் எதிர்பார்க்கும் தலைவர்களில், ஒரு பெண்ணும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நகர் மாவட்டத்தின் எலஹங்கா; சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் கவுரி பிதனுார், பாகேபள்ளி, சிக்கபல்லாபூர்; பெங்களூரு ரூரலின் தொட்டபல்லாபூர், தேவனஹள்ளி, நெலமங்களா, ஹொஸ்கோட் சட்டசபை தொகுதிகள் சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் அடங்கி உள்ளன.
பெண்கள் அதிகம்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இந்த லோக்சபா தொகுதிகளில், 9,69,526 ஆண் வாக்காளர்கள், 9,80,641 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிட்டால், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.
காங்கிரசில் முன்னாள் எம்.பி., வீரப்ப மொய்லி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரக்ஷா ராமையா, முன்னாள் அமைச்சர் சிவசங்கர ரெட்டி உள்ளிட்டோர் சீட் எதிர்பார்க்கின்றனர். பா.ஜ.,வில் முன்னாள் அமைச்சர் சுதாகர், எலஹங்கா எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகன் அலோக் சீட் எதிர்பார்க்கின்றனர். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதால், ம.ஜ.த.,வில் யாரும் சீட் எதிர்பார்க்கவில்லை.
பா.ஜ., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளில், செல்வாக்குமிக்க தலைவிகள் உள்ளனர். ஆனால் லோக்சபா தேர்தலில் சீட் கேட்போரில், தலைவிகளின் பெயரே தென்படவில்லை. எலஹங்கா தொகுதியை தவிர, மற்ற தொகுதிகளில் மகளிர் வாக்காளர்களின் கை ஓங்கியுள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில், இவர்களே வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பர்.
முன்வராத தலைவிகள்
அப்படி இருந்தும் 'நானும் சீட் எதிர்பார்க்கிறேன்' என, கூறும் ஒரு தலைவியும் இல்லை. மகளிர் வாக்காளர்களின் மனதில் இடம் பிடிப்பவருக்கே வெற்றி மாலை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதி, செயல்பாட்டுக்கு வந்த பின், 12 தேர்தல்கள் நடந்தன. ஆனால் இதுவரை இந்த தொகுதியில், பெண் எம்.பி., தேர்வு செய்யப்பட்ட உதாரணமே இல்லை. 1984, 1998, 1999, 2014ல் தலா ஒரு பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 1998ல் லோக்சக்தி கட்சி சார்பில் நடிகை ஜெயந்தி போட்டியிட்டு 2,04,359 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
சிக்கபல்லாபூர் அரசியலில், பெண்களை ஓட்டுக்காக மட்டுமே, அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. தலைவிகளை அடையாளம் கண்டு, சீட் கொடுப்பதில் எந்த கட்சிகளும் அக்கறை காண்பிக்கவில்லை. சீட் கிடைக்காது என, தெரிந்ததால் செல்வாக்கு மிக்க தலைவிகளும் கூட, சீட் கேட்க முன் வருவதில்லை.
பெண்கள் முன்னேற்றம் குறித்து, வீரா வேசமாக உரையாற்றும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மட்டும், பெண்கள் நினைவுக்கு வருவது இல்லை என்ற வருத்தம், அரசியல் தலைவிகளுக்கு எப்போதும் உள்ளது.