இரவு முழுக்க பார்ட்டி... அதிகாலையில் நடந்த கோரம்; 6 மாணவர்கள் பலியான சோகம்
இரவு முழுக்க பார்ட்டி... அதிகாலையில் நடந்த கோரம்; 6 மாணவர்கள் பலியான சோகம்
ADDED : நவ 15, 2024 02:10 PM

டேராடூன்: உத்தராகண்ட்டில் இரவு பார்ட்டியில் பங்கேற்று விட்டு, சொகுசு காரில் அதிவேகமாக சென்ற 3 மாணவிகள் உள்பட கல்லூரி மாணவர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த 12ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் 7 மாணவர்கள் சென்ற இனோவா கார் ஒன்று, லாரியின் மீது அதிபயங்கரமாக மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரின் எந்த பாகமும் மிஞ்சியபாடில்லை. அந்த அளவுக்கு காரை மாணவர்கள் இயக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களான, குணால் குக்ரெஜா, 23, அதுல் அகர்வால், 24, ரிஷப் ஜெய்ன்,24, நவ்யா கோயல்,23, காமாக்ஷி,20, குணீத்,19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, காரை போட்டி போட்டுக் கொண்டு ஓட்டியதால் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும், நள்ளிரவில் மாணவர்கள் பார்ட்டி நடத்தியதாகவும், அதில் மது அருந்தியதால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.