முதல்வர் நிதிஷ் மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க கட்சி தீர்மானம்
முதல்வர் நிதிஷ் மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க கட்சி தீர்மானம்
ADDED : மார் 08, 2026 02:33 AM

பாட்னா: ''பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பின் அமைக்கப்படும் புதிய அரசில், அவரது மகன் நிஷாந்த்தை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்,'' என, முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-.,வுமான ஹரி நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரம்
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முதல்வர் நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி., ஆனதும், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்வார். இதனால், பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவி கிடைக்கும். ராஜினாமாவுக்கு பின், பா.ஜ., தலைமையில் அமையும் புதிய அரசில், தன் மகன் நிஷாந்த்தை துணை முதல்வராக்கவும் நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
இந்நிலையில், தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள், மேல்சபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், நிஷாந்த்தை மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்து, துணை முதல்வராக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு பின், முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-.,வுமான ஹரி நாராயண் சிங் கூறியதாவது:
முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பின் அமைக்கப்படும் புதிய அரசில், அவரது மகன் நிஷாந்த்தை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.
வெற்றி பெறுவார்
அடுத்த மாதம் மேல்சபையில் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் நிஷாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார். பின், அவரை துணை முதல்வராக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பாட்னாவில் இன்று நடக்கும் விழாவில், ஐக்கிய ஜனதா தளத்தில் நிஷாந்த் முறைப்படி இணைகிறார்.
பீஹாரை விட்டு போகக்கூடாது!
பீஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை, விருப்பப்பட்டு நிதிஷ் குமார் எடுத்திருக்க மாட்டார். அவர் பா.ஜ.,வால் பீஹாரை விட்டு வெளியேற்றப்படுகிறார். இந்த அழுத்தத்திற்கு அவர் அடிபணியக்கூடாது. அவர் பீஹாரை விட்டு போகக்கூடாது. -ரப்ரி தேவி முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

