உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை: அகிலேஷ் யாதவ் கண்டுபிடிப்பு
உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை: அகிலேஷ் யாதவ் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 17, 2024 02:50 PM

லக்னோ: 'உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால், மக்கள் சிரமப்படுகின்றனர்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் விஜய் பகதூர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னர், நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பா.ஜ., ஆட்சி நிலையற்றது. ஆசிரியர்களை பா.ஜ., அரசு துன்புறுத்துகிறது. இது அரசு பலவீனமாகி விட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது. நீதி கேட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதிருப்தி
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பலர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாக துணை முதல்வர் கேசவ் மவுரியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, உ.பி., பா.ஜ., தலைவர் பூபேந்திர சவுத்திரி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் நட்டாவுடன் உ.பி., பா.ஜ.,வுக்குள் நடந்து வரும் கோஷ்டி மோதல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.