விமான ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட பயணிகள்: விமான நிலையத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
விமான ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட பயணிகள்: விமான நிலையத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
UPDATED : ஜன 16, 2024 01:19 PM
ADDED : ஜன 16, 2024 04:06 AM

புதுடில்லி : மும்பை விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் உணவு சாப்பிட்டது தொடர்பாக விமான நிறுவனத்திற்கும், விமான நிலையத்திற்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து, கோவாவுக்கு, நேற்று முன்தினம், தனியார் துறையைச் சேர்ந்த, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானம் புறப்பட தாமதமானது. பல மணி நேரம் தாமதமானதால், விமானத்தில் இருந்த பயணியர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், விமானம் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட துணை விமானி அனுப் குமாரை, விமானத்தில் இருந்த சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கினார். இதைப் பார்த்து சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தன் செயலுக்கு, சாஹில் கட்டாரியா வருத்தம் தெரிவித்தார். எனினும், இது குறித்து, போலீசில் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாஹில் கட்டாரியாவை கைது செய்தனர். இறுதியில் விமானம், 10 மணி நேர தாமதத்துக்கு பின், கோவாவுக்கு புறப்பட்டது.
விமானி அனுப் குமாரை சாஹில் கட்டாரியா தாக்கியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே, சாஹில் கட்டாரியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி விமானங்களில் பயணம் செய்ய முடியாதபடி, அவரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், இண்டிகோ நிறுவனம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பின் அதே விமானம், கோவாவில் இருந்து டில்லி சென்றது. ஆனால், டில்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தில் இருந்த பயணிகள், ஓடுதளத்தில் அருகில் உள்ள விமானங்கள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உணவு உண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனையடுத்து இண்டிகோ விமான நிறுவனத்திற்கும், விமான நிலையத்திற்கும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆலோசனை நடத்தினார்.