ரயில் பெட்டி மின் விசிறியில் பயணி துாக்கிட்டு தற்கொலை
ரயில் பெட்டி மின் விசிறியில் பயணி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 19, 2024 12:43 AM
பையப்பனஹள்ளி : காரைக்கால் அதிவிரைவு ரயிலின் மின் விசிறியில், 45 வயது நபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
மைசூரில் இருந்து புறப்பட்ட, காரைக்கால் அதி விரைவு ரயில், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு, பெங்களூரின் பையப்பனஹள்ளி விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தின், பிளாட்பாரம் எண் 5ல் வந்து நின்றது.
முன் பதிவு பெட்டியில் ஏறிய பயணியர், அப்பெட்டியில் இருந்த மின் விசிறியில் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.
தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார், அந்நபரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். 45 வயது மதிக்கத்தக்க அந்நபர், கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ரயில்வே போலீஸ் அதிகாரிகள், நேற்று காலை கூறியதாவது:
நள்ளிரவு நேரம், ரயில் பெட்டி காலியாக இருந்த போது, இந்த சம்பவம் நடந்திருக்கலாம். அவரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை. யாராவது காணாமல் போயிருந்தால், எங்களுக்கு தகவல் கூறும்படி, அனைத்து ரயில் நிலையங்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
அந்நபரிடம் இருந்த டிக்கெட்டின்படி, அவர் ஜனவரி 16ல் திருச்சூரில் இருந்து, கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கும், மைசூருக்கும் பயணித்துள்ளார். அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.
அவர் தற்கொலை செய்து கொண்ட பெட்டி, ரயிலில் இருந்து பிரித்து, யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால், ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

