ஆவேசம்!ஜாதியின் பெயரில் வன்முறையை தூண்டுவதா?: வாரணாசியில் காங்கிரசை வறுத்தெடுத்த மோடி
ஆவேசம்!ஜாதியின் பெயரில் வன்முறையை தூண்டுவதா?: வாரணாசியில் காங்கிரசை வறுத்தெடுத்த மோடி
ADDED : பிப் 23, 2024 11:15 PM

வாரணாசி: ''எதிர்க்கட்சிகள் ஜாதியின் பெயரால் மக்களை துாண்டிவிடுகின்றன. சுயபுத்தி இல்லாதவர்கள், வாரணாசி இளைஞர்களை போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று துாற்றுகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான வாரணாசியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். 15 மற்றும் 16ம் நுாற்றாண்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த கவிஞர் ரவிதாசின் 647வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
வளர்ச்சி திட்டங்கள்
பனாரஸ் ஹிந்து பல்கலையில் நடந்த சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும், 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.
அதன் பின் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என் மீது அவதுாறுகளை வாரி இறைத்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் இப்போது இளைஞர்கள் மீது அவதுாறுகளை வீசுகின்றனர்.
சுயபுத்தி இல்லாதவர்கள், வாரணாசி இளைஞர்களை போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என விமர்சிக்கின்றனர்.
உ.பி., இளைஞர்கள் மீதான இந்த அவதுாறை யாரும் மறக்க மாட்டார்கள். இப்போதுள்ள காசி மற்றும் அயோத்தியை அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ராமர் கோவிலைப் பற்றி அவர்கள் என்னென்ன பேசுகின்றனர் என்பதை நீங்களே காணலாம். ராமர் மீது அவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு உள்ளது என்பதை நானும் அறியவில்லை.
அவர்களால் தங்கள் குடும்பம் மற்றும் ஓட்டு வங்கியை தாண்டி சிந்திக்க முடியவில்லை. எனவே தான், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் அவர்கள் கூட்டணி சேருகின்றனர். முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக இருந்தால், ஒருவரை ஒருவர் துாற்றி, விலகிச் செல்கின்றனர்.
இந்த தந்திரத்துக்கு எல்லாம் உ.பி., மக்கள் இந்த முறை மசிய மாட்டார்கள். எதிர்க்கட்சியினர் டிபாசிட்டை காப்பாற்றிக் கொள்வதே கடினம். அனைத்து தொகுதிகளிலும் தே.ஜ., கூட்டணியை வெற்றி பெறச் செய்ய, மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மூன்றாவது முறையாக பதவி ஏற்கப் போகும் மோடி அரசு, உலக அளவில் இந்தியாவின் திறன்களை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தும் ஆட்சியுடையதாக இருக்கும். இந்த முறையும் மோடி ஆட்சி தான் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
உயர் பதவி
காரணம், எதிர்க்கட்சிகள் ஜாதியின் பெயரால் மக்களை துாண்டிவிடுகின்றனர்.
தலித்துகள், பழங்குடியினர் உயர் பதவிகளுக்கு வருவதை, அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு போட்டி யிட்ட போது, அவரை எதிர்க்க ஒன்று திரண்ட கட்சியினர் யார் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, தேர்தல் நேரத்தில் ஓட்டு வங்கிகளாக மட்டுமே அரச குடும்ப கட்சியினர் பார்க்கின்றனர். அவர்களிடம் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்; அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.