ஒற்றுமைக்காக பாடுபட்டவர் படேல் முதல்வர் ரேகா குப்தா புகழாரம்
ஒற்றுமைக்காக பாடுபட்டவர் படேல் முதல்வர் ரேகா குப்தா புகழாரம்
ADDED : நவ 01, 2025 12:46 AM

புதுடில்லி: “நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல், 550க்கும் சமஸ்தானங்களை இணைத்தார்” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
நம் நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்த நாள் நாடு முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, பர்வேஷ் வர்மா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டத்தை, அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது, முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
சர்தார் வல்லபபாய் படேல் நாட்டின் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்டதால், இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டார்.
படேலின் 150 வது நாள் பிறந்த நாளை முன்னிட்டு டில்லி அரசு சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றதில் இருந்து 2014ம் ஆண்டு முதல் அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டின் முதல் மத் திய உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்த படேல், 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை நம் நாட்டுடன் இணைத்தார்.
மூளையில் கோளாறு தீபாவளியன்று இரவில் காற்று தரக்குறியீட்டை குறைத்து வெளியிட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அக்கட்சி தலைவர்களின் மூளையில் தான் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீட்டை திருத்தி வெளியிட முடியாது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது எங்கள் வேலை அல்ல. டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியினர் வேலையின்றி இருப்பதால், தினமும் ஏதாவது யோசித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசு மீது சுமத்தி வருகின்றனர். மக்களைத் தவறாக வழிநடத்தி, அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை ஆம் ஆத்மி தலைவர்கள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானா ஹரியானா மாநிலம் பதேஹாபாதில் நடந்த படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நயாப் சிங் சைனி, கொடியசைத்து ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்தன் வாயிலாக சர்தார் வல்லபபாய் படேலின் கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். படேல் சிறந்த தேசியவாதி. நிர்வாகத் திறன் மிகுந்த தலைவராக திகழ்ந்தார்.
அரசின் பல்வேறு துறைகளில் படேலின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஒற்றுமை ஓட்டம் நம் நாட்டின் பன்முகத் தன்மை, நம் நாட்டின் பலம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. நாட்டின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கின்றனர். உடை கலாசாரம் கூட்ட விதவிதமாக இருக்கின்றன.
ஆனால், நாம் ஒன்றுபட்டு வாழ்கிறோம் என்பதை இந்த ஒற்றுமை ஓட்டம் உலகுக்கு உணர்த்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.

