ADDED : ஜன 19, 2024 12:05 AM

ஜோர்ஹட் (அசாம் ): அனுமதியில்லாத சாலையில், 'பாரத் ஜோடோ நியா' யாத்திரை மேற்கொண்டதாக, காங், எம்.பி.ராகுல் மீது, தாமாக முன் வந்து போலீசார், எப்.ஐ.ஆர்., வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்., எம்.பி., ராகுல், இரண்டாம் கட்டமாக 'பாரத் ஜோடோ நியாய' யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை கடந்த 14ம் தேதி, மணிப்பூரில் துவங்கினார். யாத்திரை, 15 மாநிலங்களில், 67 நாட்கள், 6,712 கி.மீ., துாரம் நடக்க உள்ளது. மார்ச் 20ல், மும்பையில் யாத்திரையை, ராகுல் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஜோர்ஹட் மாவட்டம் கே.பி. சாலையில், ராகுலின் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தெரிந்தும் வேறு சாலை வழியாக ராகுல் அத்துமீறி யாத்திரை சென்று, அங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது ராகுல் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்க்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல், அத்துமீறியதாக ராகுல் மீது ‛‛சூமோட்டோ எப்.ஐ.ஆர்'' எனப்படும் தாமாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையை ஜோர்ஹட் சதார் போலீஸ் நிலைய போலீசார் பதிவு செய்துள்ளனர்.

