ADDED : செப் 21, 2024 06:56 AM

சதாசிவநகர்: பெங்களூரு ராமய்யா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு சதாசிவநகரில் ராமய்யா தனியார் மருத்துவமனை உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1:25 மணிக்கு, இந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் நோயாளிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால் தீ விபத்தில் சிக்கி, பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கனிகர், 34, என்பவர் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
'தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, கனிகரை சந்தித்துப் பேசினோம். தீ விபத்துக்கு பின், கனிகரை சந்திக்க எங்களை, மருத்துவமனை ஊழியர்கள் விடவில்லை. தீயில் சிக்கி காயம் அடைந்து அவர் இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு மருத்துவமனை அலட்சியமே காரணம்' என, அவர்கள் கூறினர். இதுபற்றி விசாரணை நடக்கிறது.