பயன்படாத ஹைடெக் மருத்துவமனை ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் ஏமாற்றம்
பயன்படாத ஹைடெக் மருத்துவமனை ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் ஏமாற்றம்
ADDED : டிச 23, 2024 07:07 AM

பெங்களூரு: மாநகராட்சியைச் சார்ந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அனைத்து வசதிகள் இருந்தும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஊழியர்கள் பற்றாக்குறை முட்டுக்கட்டையாக உள்ளது.
பெங்களூரின் கோவிந்தராஜ நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அக்ரஹாரா தாசரஹள்ளி வார்டின், எம்.சி., லே அவுட்டில் பாலகங்காதரநாத சுவாமிகளை நினைவுகூரும் வகையில், பெங்களூரு மாநகரட்சி சார்பில் 300 படுக்கைகள் கொண்ட, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது.
ரூ.106 கோடி
கடந்த 2023 மார்ச்சில், அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். 106 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. திறந்து வைக்கப்பட்டும், நோயாளிகளுக்கு பயன்படவில்லை.
பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததால், சில மாதங்களுக்கு முன்பு, வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட துவங்கியது.
கண், காது, மூக்கு, தொண்டை, பல் வலி என, சிலவற்றிற்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால், அவசர சிகிச்சை பிரிவு இன்னும் செயல்படவில்லை. அறுவை சிகிச்சைகளும் நடப்பதில்லை. ஹைடெக் கட்டடத்தை பார்த்து, தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர்.
தாசரஹள்ளி, தாவரகெரே, விஜயநகர், ஹொசஹள்ளி, கோவிந்தராஜ நகர், காமாட்சி பாளையா, லக்கரே, நந்தினி லே - அவுட் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். ஆனால் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.
வெளிநோயாளிகள்
தரைத் தளத்தில் வெளி நோயாளிகள் பிரிவு உள்ளது. முதல் மாடியில் ஹர்னியா, மூலம் போன்ற மைனர் அறுவை சிகிச்சைகள் மட்டும் நடக்கின்றன. ஏழு அறுவை சிகிச்சை அறைகள் உள்ளன.
வென்டிலேட்டர் வசதி இல்லை. மேஜர் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தால், நோயாளிகளை மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல், விக்டோரியா மருத்துவமனைகளுக்கு சிபாரிசு செய்து அனுப்புகின்றனர்.
தற்போது ஏழு டாக்டர்கள், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். சிறப்பு டாக்டர்கள், நர்ஸ்கள், ஆய்வக வல்லுனர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் அனைத்து வசதிகள் இருந்தும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. 'சிடி' ஸ்கேனிங், எம்.ஆர்.ஐ., இயந்திரங்கள் துாசி படிந்து கிடக்கின்றன.
மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
பெயருக்கு மட்டுமே, இது ஹைடெக் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. அதி நவீன மருத்துவ உபகரணங்கள். சிறப்பு டாக்டர்களை நியமிக்கவில்லை. மருத்துவமனையை திறந்து வைத்த போது, கித்வாய், நிமான்ஸ், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு நடத்தப்பட்டது.
சிறப்பு டாக்டர்கள்
ஆனால் மருத்துவமனை முழுமையான அளவில் செயல்படவில்லை. இங்கு வரும் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திரும்பிச் செல்வது வருத்தம் அளிக்கிறது. மாநில அரசு உடனடியாக சிறப்பு டாக்டர்கள் உட்பட தேவையான ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

