ADDED : நவ 10, 2024 12:16 AM
பெங்களூர்: ''நாட்டில் பெண்கள் வளர்ச்சியை ஆணாதிக்கம் தடுத்தது என்றால், இந்திரா பிரதமரானது எப்படி,'' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சி.எம்.எஸ்., வணிக கல்லுாரி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடலின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
புதுமைகளை கண்டுபிடிப்பவர்களுக்கான உகந்த சூழலை நரேந்திர மோடி அரசு உருவாக்கி வருகிறது. நாங்கள் கொள்கைகளை வெளியிட்டு, புதிய கண்டுபிடிப்புகளை மட்டும் ஆதரிக்கவில்லை.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கான சந்தையை உறுதி செய்ய, மத்திய அரசு அனைத்தையும் செய்து வருகிறது.
நம் நாட்டில் ஆணாதிக்கம் பெண்களின் வளர்ச்சியை தடுப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படியானால், இந்திரா பிரதமரானது எப்படி?
ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருத்து. இதுபோன்ற வாசகங்களால் மயங்கி விடாதீர்கள். உங்களுக்காக நின்று தர்க்கரீதியாக பேசினால், உங்கள் கனவுகளை அடைவதை ஆணாதிக்கம் தடுக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.