கட்டட கலைக்கு எடுத்துக்காட்டான பட்டடக்கல் சங்கமேஸ்வரா கோவில்
கட்டட கலைக்கு எடுத்துக்காட்டான பட்டடக்கல் சங்கமேஸ்வரா கோவில்
ADDED : அக் 29, 2024 07:32 AM

கர்நாடகாவின் வடமாவட்டமான பாகல்கோட் எந்த அளவுக்கு சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றதோ, அதே அளவுக்கு ஆன்மிகத்திற்கும் பெயர் பெற்றது. இங்கு ஏராளமான பழங்கால, வரலாற்றை பறைசாற்றும் கோவில்கள் உள்ளன. அதில் ஒரு கோவிலை பற்றி பார்க்கலாம்.
பாகல்கோட் பட்டடக்கல் டவுனில் உள்ளது சங்கமேஸ்வரா கோவில். கி.பி., 720ல் சாளுக்கிய ஆட்சியாளர் விஜய ஆதித்தனால் இந்த கோவில் கட்டப்பட்டது.
கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் கலகநாதா, விருபாக் ஷா கோவில்களும் கட்டப்பட்டு உள்ளன. வடக்கிலும், தெற்கிலும் கோவிலுக்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. 20 துாண்கள் கொண்ட பெரிய ரங்க மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி, விநாயகருக்கு இரண்டு துணை சன்னிதிகள் உள்ளன. கோவிலின் முன்புறம் நந்தி மண்டபமும் உள்ளது.
வெளிப்புற சுவரில் உக்கிர நரசிம்மர், நடராஜர் சிலைகள் உள்ளன. கோவிலுக்கு நன்கொடை அளித்த ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்கள், கோவில் சுவரில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டட கலையை கண்டு பிரமித்து போகின்றனர். அர்ச்சகர்களிடம் கோவிலை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்கின்றனர். தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
நுழைவு கட்டணம் 10 ரூபாய்; கேமராவுக்கு 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து பட்டடக்கல் 443 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் பாகல்கோட் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.