பவன் கல்யாண் விமர்சனத்துக்கு ஆளான அமைச்சர் விளக்கம்
பவன் கல்யாண் விமர்சனத்துக்கு ஆளான அமைச்சர் விளக்கம்
ADDED : நவ 05, 2024 11:18 PM

ஹைதராபாத், ஆந்திராவில், கூட்டணி கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு, அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ராஜினாமா
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜன சேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் விமர்சித்த பவன் கல்யாண், 'உள்துறை அமைச்சர் அனிதா திறம்பட செயல்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் உள்துறையை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும்' என்றார்.
இதை தொடர்ந்து, ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்தது. பவன் கல்யாண் விமர்சனம் குறித்து நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான ரோஜா கூறுகையில், “நாங்கள் கூறி வருவதை துணை முதல்வரும் இப்போது ஆமோதித்துள்ளார்.
''கடமையை திறம்பட செய்யாத உள்துறை அமைச்சர் அனிதா பதவியை ராஜினாமா செய்வாரா,” என கேள்வி எழுப்பினர்.
நேர்மறை கருத்து
இதுகுறித்து ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா நேற்று கூறியதாவது:
துணை முதல்வர் பவன் கல்யாண் கூறிய கருத்துகளை நான் விமர்சனமாக பார்க்கவில்லை; ஊக்குவிப்பாகவே பார்க்கிறேன். 'குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை கைது செய்ய மாட்டீர்களா' என, துணை முதல்வர் எழுப்பிய கேள்வியை நேர்மறை கருத்தாகவே கருதுகிறேன்.
மிக முக்கியமான பதவிவை வகிக்கிறேன். எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. அதை திறம்பட செய்ய நான் இன்னும் ஆக்ரோஷத்துடன் செயல்படலாம் எனக்கூறி, அவர் என்னை ஆதரிப்பதாகவே நினைக்கிறேன்.
இதை சரியாக புரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் என்னை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.