கூட்டணி அரசை விமர்சித்த பவன் கல்யாண் ஆந்திர உள்துறை அமைச்சருக்கு மிரட்டல்
கூட்டணி அரசை விமர்சித்த பவன் கல்யாண் ஆந்திர உள்துறை அமைச்சருக்கு மிரட்டல்
ADDED : நவ 05, 2024 02:14 AM
ஹைதராபாத், ''ஆந்திராவில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நிலைமை சீரடையவில்லை எனில், உள்துறையையும் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்,'' என, கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு, துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றங்கள் அதிகரிப்பு
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில துணை முதல்வராக, நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார்.
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, தன் சொந்த தொகுதியான பித்தாபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று பேசியதாவது:
ஆந்திராவில் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் அனிதாவிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கூட்டணி விரிசல்
உங்கள் கடமையை நீங்கள் திறம்பட செயல்பட வேண்டும். தவறினால், உள்துறையையும் நான் நிர்வகிக்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுவேன்.
உள்துறையை நான் கேட்டு பெறவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ முடியாது என்று நினைக்காதீர்கள். நான் அந்த துறைக்கு வந்தால் என் செயல்பாடு வேறு விதமாக இருக்கும்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் போல நாம் செயல்பட வேண்டும். இல்லையெனில் எதுவும் மாறாது. எனவே, நீங்கள் மாறப்போகிறீர்களா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பவன் கல்யாணின் வெளிப்படையான விமர்சனத்தால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துஉள்ளது.