செபி மட்டுமல்ல... ஐசிஐசிஐ.,யிடம் இருந்தும் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்ற மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
செபி மட்டுமல்ல... ஐசிஐசிஐ.,யிடம் இருந்தும் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்ற மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ADDED : செப் 02, 2024 03:41 PM

புதுடில்லி: செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் பணியை செயல்படுத்தி வருவது செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை வாரியம். செபியின் தலைவரை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ள கேபினட் கமிட்டியே நியமிக்கிறது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் இருந்து தற்போது வரை செபி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், செபி தலைவராக ஊதியம் பெற்று கொண்டு இருக்கும் மாதவி, ஐசிஐசிஐ.,யிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
2017-ல் இருந்து இதுவரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி புரி புச் பெற்றுள்ளதாக காங்கிரசின் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், ''செபி தலைவர் மாதவி, 2017 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வருமானமாக ரூ.16.8 கோடியை பெற்றுள்ளார். செபியின் முழு நேர அதிகாரியாக இருக்கும் மாதவி, ஐசிஐசிஐ வங்கியில் எப்படி ஊதியம் பெறலாம்?'' என பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.