கட்சியின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார் பவார்
கட்சியின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார் பவார்
ADDED : பிப் 24, 2024 11:16 PM

மும்பை: தேசியவாத காங்., - சரத் சந்திர பவார் பிரிவுக்கு, தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, 'டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னத்தை, அக்கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று அறிமுகப்படுத்தினார்.
மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜ., கூட்டணி அரசில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களோடு அஜித் பவார் இணைந்ததை அடுத்து, தேசியவாத காங்., பிளவுபட்டது.
தொடர்ந்து, துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களில் எட்டு பேர் அமைச்சர்களாகினர்.
இதையடுத்து, கட்சிக்கும், கட்சி சின்னமான கடிகாரத்துக்கும் உரிமை கோரி, சரத் பவார் - அஜித் பவார் தரப்பினர் தலைமை தேர்தல் கமிஷனில் முறையிட்டனர்.
இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான பிரிவு, உண்மையான தேசியவாத காங்., என அங்கீகரித்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவரது தரப்புக்கு வழங்கி உத்தரவிட்டது.
சரத் பவார் பிரிவுக்கு, தேசியவாத காங்., - சரத் சந்திர பவார் என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது. சமீபத்தில், இந்த பிரிவுக்கு, 'டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள ராய்கட் கோட்டையில், தேசியவாத காங்., - சரத் சந்திர பவார் பிரிவின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற அப்பிரிவின் தலைவர் சரத் பவார், 'டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ''மக்கள் ஆட்சியை நிறுவ நாம் போராட வேண்டும். மக்கள் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபடும் அரசை அமைக்க வேண்டும். இதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், நமது புதிய சின்னம் உள்ளது,'' என்றார்.

