ADDED : பிப் 26, 2024 08:41 PM

புதுடில்லி: 'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கிக்கு எதிராக அமலாக்கத்துறை, அதன் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதன் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார் விஜய்சேகர் ஷர்மா.
பிப். 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த திடீர் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்க மறுத்தது.
இது தொடர்பாக பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
அமலாக்கத் துறை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு எதிராக, முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா பதவி விலகினார்.
'பெமா' எனும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறை மீறலில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

