ஜம்மு - காஷ்மீரில் 'பென் டிரைவு'க்கு தடை 'வாட்ஸாப்' செயலிக்கும் கட்டுப்பாடு
ஜம்மு - காஷ்மீரில் 'பென் டிரைவு'க்கு தடை 'வாட்ஸாப்' செயலிக்கும் கட்டுப்பாடு
ADDED : ஆக 26, 2025 02:52 AM
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரசு அலுவலகங்களில் 'பென் டிரைவ்' பயன்படுத்தவும், தகவல் தொடர்புக்கு, 'வாட்ஸாப்' உள்ளிட்ட செயலிகளை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்த மே மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
அப்போது, ஜம்மு - காஷ்மீர் அரசின் பல அதிகாரப்பூர்வ தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்குள்ள பொதுச் சேவைகள் மற்றும் அரசு செயல்பாடுகள் முடங்கின.
அபாயம்
இதையடுத்து, சைபர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, அரசு அலுவலக செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பொது நிர்வாக துறை பங்குகளில் செயலர் ராஜூ நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்படுவதாவது:
ஜம்மு - காஷ்மீரில் சைபர் பாதுகாப்பை அதிகரிக்கவும், முக்கியமான அரசு தகவல்களை பாதுகாக்கவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், டேட்டா திருட்டு, வைரஸ் தாக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத அபாயங்களை குறைக்கப்படும்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள சிவில் அலுவலகம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை கமிஷனர் அலுவலகங்களில் பென் டிரைவ் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
அவசியம் ஏற்பட்டால், ஒரு துறைக்கு இரண்டு அல்லது மூன்று பென் டிரைவ் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்கு அந்த துறையின் தலைவர், மாநில தகவல் துறை அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
அரசு 'டிரைவ்'
என்.ஐ.சி., எனப்படும் தேசிய தகவல் மையம் இதற்கான அனுமதியை வழங்கும்.
முறையான சோதனைக்கு பின் வழங்கப்படும் பென் டிரைவை யார் பயன்படுத்தவுள்ளனர் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படும். அதன் பின்னரே, பென் - டிரைவை பயன்படுத்த முடியும்.
பென் - டிரைவுக்கு பதிலாக, அரசு 'டிரைவ்' எனப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும். இது, கிளவுட் அடிப்படையிலான சேவை.
இதில், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 50 ஜி.பி., இடம் ஒதுக்கப்படும். அரசு அலுவலக தொடர்பான தகவல்களை இந்த அமைப்பில் பாதுகாப்பாக சேமிக்கலாம். அரசு தகவல்களை வாட்ஸாப் செயலி வாயிலாக பரிமாற தடை விதிக்கப்படுகிறது.
இந்த விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.