ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம்
ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம்
ADDED : அக் 21, 2024 11:16 PM

பெங்களூரு :லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கர்நாடகாவில் செயல்படும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33;
நான்கு பலாத்கார வழக்குகளில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 2ம் தேதி, கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'பிரஜ்வல், 400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்' என, குற்றம் சாட்டினார்.
பெண்களின் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் ராகுல் கருத்து கூறியதாகவும், அவர் மீது கர்நாடக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அகில இந்திய தலித் நடவடிக்கை குழுவின் தேசிய தலைவர் ராமு, குழுவின் தேசிய மகளிர் பிரிவு தலைவர் சுசிலா தேவராஜ் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
ராகுல் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராமு, சுசீலா தேவராஜ் பொதுநல மனுவும் தாக்கல் செய்தனர்.
மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வு விசாரித்தது. மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல் ரவிசங்கர் வாதாடுகையில், ''பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என, பொது இடத்தில் ராகுல் பேசி உள்ளார்.
''ஓட்டுக்காக பொறுப்பற்ற முறையில் இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
அரசு வக்கீல் நிலோபர் அக்பர், ''இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
நீதிபதிகள், 'இந்த மனுவில் பொது நலன் எதுவும் இல்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், 'மனுதாரர்கள் அபராத தொகையாக 25,000 ரூபாயை வக்கீல்கள் சேம நல நிதிக்கு செலுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.