நிலுவை ஓய்வூதியம் 'டெபாசிட்' முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
நிலுவை ஓய்வூதியம் 'டெபாசிட்' முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
ADDED : பிப் 10, 2024 12:58 AM

புதுடில்லி:''அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 20,000 ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஒன்றை ஆண்டு நிலுவை ஓய்வூதியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
டில்லி போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற 20,000 ஊழியர்கள் ஓய்வூதியம் கிடக்காமல் ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
மத்திய பா.ஜ., அரசு டில்லி அரசின் செயல்பாட்டில் தலையிடுவதால் மக்களுக்கான பல நன்மைகளை உடனடியாக செய்ய முடியவில்லை.
உங்களில் பலர் கோபம் அடைந்திருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் கோபம் நியாயமானது. கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில்தான் டில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சியிடம் டில்லி அரசை ஒப்படைத்தனர்.
ஆனால், அதற்கு முன்பிருந்தே ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு பல இன்னல்களை சந்தித்தனர். ஓய்வூதியத்கான நிதியை ஒதுக்க சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
என் மீது நம்பிக்கை வையுங்கள். நான் இருக்கும் வரை உங்கள் ஓய்வூதியத்தை நிறுத்த விட மாட்டேன். டில்லி அரசிடம் முழுமையான அதிகாரம் இல்லை.
அரசை நடத்த மாநில அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மத்திய அரசு அவற்றையும் பறித்து விட்டது. டில்லி அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் 20,000 தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இனி, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.