பெண்ணையாறு பங்கீடு: தமிழக, கர்நாடகா சமரச பேச்சு தோல்வி
பெண்ணையாறு பங்கீடு: தமிழக, கர்நாடகா சமரச பேச்சு தோல்வி
ADDED : நவ 27, 2024 03:55 AM

புதுடில்லி: பெண்ணையாறு நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே நடந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்ததாக, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சின் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகம் வழியே சென்று வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆற்றுக்கு தென் பெண்ணையாறு என்று பெயர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தி ஆகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் வழியே பாய்ந்து கடலில் கலக்கிறது.
பெண்ணையாற்று நீரை பங்கிட்டுக் கொள்வதில், தமிழகம் -மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் யார்கோல் கிராமம் அருகே, பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட, கர்நாடகா நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்தாண்டு துவக்கத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அமைத்த மத்தியஸ்த குழுவின் முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், இரண்டு முறை மட்டுமே அந்தக் குழு கூடியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, புதிய மத்தியஸ்த குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. பேச்சுகள் நடத்தி தீர்வு காணும்படியும், அதை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பட்டி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பேச்சு தொடர்பான மத்தியஸ்த குழுவின் அறிக்கையை, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அமர்வு உத்தரவிட்டுள்ளது.