ADDED : ஏப் 23, 2025 01:53 AM
புதுடில்லி:“கணவனை இழந்தோர் மற்றும் விவாகரத்து ஆன பெண்களுக்கான ஓய்வூதியத்தை பா.ஜ., அரசு நிறுத்தி விட்டது. இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை,” என, டில்லி ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
சவுரவ் பரத்வாஜ், நிருபர்களிடம்  கூறியதாவது:
கணவனை இழந்தோர் மற்றும் விவாகரத்து ஆன பெண்களுக்கு இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை. அரசு வழங்கும் இந்தப் பணத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  எந்த அறிவிப்பும் இல்லாமல் பா.ஜ., அரசு ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்துள்ளது.
டில்லி மக்களில் நலனைப் பற்றி சிந்திக்காமல், ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்ட திட்டங்களை முடக்குவதை மட்டுமே பா.ஜ., அரசு செய்து வருகிறது.
நாடு முழுதுமே பா.ஜ., தலைவர்களின் வெறுப்புப் பேச்சுக்களைக் கேட்டு, மக்கள் சலித்துக் கொள்கின்றனர்.
மக்களுக்கான திட்டங்களை முடக்குவதை கைவிட்டு, மக்கள் நலத் திட்டங்களில் பா.ஜ., அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

