UPDATED : நவ 28, 2024 04:27 AM
ADDED : நவ 28, 2024 12:41 AM

திருவனந்தபுரம், கேரளாவில் ஏழைகள், முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை மோசடியாக 1,500 அரசு ஊழியர்கள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கேரளாவில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கான இந்த ஓய்வூதிய திட்டம் வாயிலாக, மாதந்தோறும் 1,600 ரூபாயை மாநிலம் முழுதும் 62 லட்சம் பேர் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் பலர், இந்த ஓய்வூதிய தொகையை மோசடியாக பெற்று வருவதாக, மாநில அரசுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க, மாநில நிதியமைச்சர் பாலகோபால் அறிவுறுத்தலின் படி கேரளா தகவல் அமைப்பு அதிரடி ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, அரசு ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் என 1,458 பேர் ஏழைகளுக்கான இந்த ஓய்வூதியத்தை மோசடியாக பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சட்டவிரோதமாக பெற்ற ஓய்வூதிய தொகையை வட்டியுடன் திரும்ப வசூலிக்கவும் நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மோசடியாக ஓய்வூதியம் பெற்றவர்களில், ஒருவர் திருவனந்தபுரம் அரசு கல்லுாரியிலும், மற்றொருவர் பாலக்காடு அரசு கல்லுாரியிலும் உதவி பேராசிரியர்களாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சுகாதாரத்துறையை சேர்ந்த 373 ஊழியர்கள் சட்டவிரோதமாக இந்த ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர்.
இரண்டாம் இடத்தை 224 பேருடன் பொதுக்கல்வி துறை பெற்றுள்ளது. தொடர்ந்து இதுபோன்று அதிரடி சோதனை நடத்தி, முறைகேடாக ஓய்வூதியம் பெறுபவர்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.