போலீஸ் நிலையங்களுக்கு செல்ல அட்டவணை நகர கமிஷனர் செயலால் மக்கள் அதிருப்தி
போலீஸ் நிலையங்களுக்கு செல்ல அட்டவணை நகர கமிஷனர் செயலால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 29, 2024 07:38 AM

பெங்களூரு: நகர போலீஸ் நிலையங்கள் மற்றும் துணை பிரிவு அலுவலகங்களுக்கு வருகை தர அட்டவணை நிர்ணயித்துள்ள, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, இதற்கு முன்பு அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு திடீர் வருகை தந்து ஆய்வு செய்வது வழக்கம்.
கடமை தவறிய போலீசார் மீது, துறை ரீதியில் நடவடிக்கை எடுத்தார். தற்போது எந்தெந்த நாளில், போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்ய வருவார் என்ற அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
இந்த அட்டவணைக்கு பொதுமக்களுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். அட்டவணையை திரும்பப் பெறும்படி, வலியுறுத்துகின்றனர்.
நகர கமிஷனர் போலீஸ் நிலையங்களுக்கு திடீரென வருகை தந்தால், அங்குள்ள குளறுபடிகள், குறைகள் தெரியும்.
போலீசாரின் முறைகேட்டை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், போலீசார் எச்சரிக்கை அடைவர்.
'தங்களின் தவறை மூடி மறைக்க, வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக இருக்கும். மக்களுக்கு நண்பனாக போலீஸ் நிலையங்களை மாற்றுவதாக, அரசு கூறுகிறது. ஆனால், பல போலீஸ் நிலையங்களில் மாற்றம் கொண்டு வரவில்லை. புகார் அளிக்க வரும் மக்களை, குற்றவாளிகள் போன்று போலீசார் பார்க்கின்றனர். சில போலீஸ் நிலையங்களில் ஊழல் நடக்கிறது. எனவே அங்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்' என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.