பிரதமரின் வாக்குறுதி நிறைவேறும் என மக்கள் காத்திருப்பு: கெஜ்ரிவால் பதில்
பிரதமரின் வாக்குறுதி நிறைவேறும் என மக்கள் காத்திருப்பு: கெஜ்ரிவால் பதில்
ADDED : ஜன 05, 2025 09:08 PM

புதுடில்லி: '' 2020 ல் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என மக்கள் காத்திருக்கின்றனர், '' என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டில்லியில் இன்று(ஜன.,05) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசை விமர்சித்து பேசினார். மத்திய அரசுடன் மோதுவதிலேயே ஆம் ஆத்மி நேரம் செலவு செய்வதாகவும், பா.ஜ.,வுக்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்து கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களின் தலைவர்களை அவர்கள் சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால், எங்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களை நாங்கள் பிரச்னை ஆக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். இல்லை என்றால், இன்று துவக்கப்பட்ட திட்டங்கள் வந்து இருக்காது. நாங்கள் எவ்வாறு எங்களின் பணிகளை முடித்தோம் என்பதற்கு எங்களின் கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகளே ஆதாரம்.
இன்று 30 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, டில்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசையும் விமர்சித்து பேசினார். இதைக் கேட்ட எனக்கு கவலை ஏற்பட்டது. 2020 ல் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் இன்று வரை காத்துக் கொண்டு உள்ளனர்.டில்லி நில சீர்திருத்த சட்டத்தில் சில பிரிவுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இது குறித்து சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த முறை டில்லியில் பேச வரும் மோடி, இது குறித்தும் சிறிது பேச வேண்டும்.
டில்லி தேர்தலுக்கான பிரதமர் மோடியின் ஒரு கொள்கை ஆம் ஆத்மி அரசை துஷ்பிரயோகம் செய்வதே. பிரதமர் மோடி தினமும் டில்லி மக்களை துஷ்பிரயோகம் செய்கிறார். அவர்களை அவமதிக்கிறார். தேர்தலில் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

