மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்: காங்., தலைவர் கார்கே பேச்சு
மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்: காங்., தலைவர் கார்கே பேச்சு
ADDED : மார் 20, 2024 08:10 AM

புதுடில்லி: ''நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்,'' என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று (மார்ச் 19) நடந்தது. சோனியா, ராகுல், பிரியங்கா, அம்பிகா சோனி, சிதம்பரம், அஜய் மாகன், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒப்புதல்
அப்போது, லோக்சபா தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை, சிதம்பரம் வாசித்து காட்டி, ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2004ல், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்தை எழுப்பி, தேர்தலை சந்தித்த வாஜ்பாய் அரசு தோல்வியை தழுவியது. அதே நிலை தான், தற்போதைய பா.ஜ., அரசுக்கும் ஏற்படும்.
கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் உறுதி மொழிகளை, நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள காங்., தொண்டர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வீடு தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். 1926 முதல், காங்கிரசின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்கான ஆவணமாக கருதப்படுகிறது.
அரசியல் யாத்திரை
ராகுல் மேற்கொண்ட யாத்திரைகள் வெறும் அரசியல் யாத்திரைகளாக அல்லாமல், மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படும். நம் காலத்தில் இவ்வளவு பெரிய யாத்திரைகளை யாரும் மேற்கொண்டதில்லை. ராகுலின் யாத்திரைகளால் மக்களின் பிரச்னைகளை தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

