ADDED : ஜன 21, 2025 07:10 AM

பெங்களூரு: லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் காட்சியை காண, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரின், லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இம்முறை மலர் கண்காட்சி, மகரிஷி வால்மீகிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் பூக்களை பயன்படுத்தி, பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிறு என்பதால், காலையில் இருந்தே மக்கள் லால்பாக் பூங்காவுக்கு வந்தனர். அன்று மட்டும் 21.44 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. குடும்பத்துடன் பலரும் வந்தனர்.
இதேபோல, நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியில் குவிந்தனர். வாழை இலை, தென்னங்கீற்றுகளில் உருவான வால்மீகி ஆஸ்ரமம், ராமர், சீதை, லட்சுமணன் உருவங்களும் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தன.
போன்சாய் மரங்களை கண்டு, மக்கள் ஆனந்தம் அடைந்தனர். வால்மீகி சம்பந்தப்பட்ட விஷயங்களை, பல்வேறு வகையான பூக்களால் உருவாக்கியுள்ளர். சிறார்களுக்கு ராமாயணம் பற்றி தெரியாத விஷயங்களை, பூக்களின் மூலமாக தெரிவிக்க முயற்சித்துள்ளனர்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் ஆஸ்ரமம், புற்று, ஜடாயு பறவை, வால்மீகி தவம் செய்யும் காட்சிகள் உட்பட, அனைத்து விஷயங்களையும் பூக்கள் வடிவில் காட்சிப்படுத்தி உள்ளனர். இவற்றை பார்த்து மக்கள் ரசித்தனர்.

