தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காற்று மாசு அதிகரிப்பு வெளியில் செல்வதை டில்லி மக்கள் தவிர்க்க வேண்டும்: டாக்டர்கள் அறிவுறுத்தல்

காற்று மாசு அதிகரிப்பு வெளியில் செல்வதை டில்லி மக்கள் தவிர்க்க வேண்டும்: டாக்டர்கள் அறிவுறுத்தல்

காற்று மாசு அதிகரிப்பு வெளியில் செல்வதை டில்லி மக்கள் தவிர்க்க வேண்டும்: டாக்டர்கள் அறிவுறுத்தல்


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகத்துக்கு சரியாகப் பொருந்தக்கூடிய, ‘என் 95’ முகக்கவசங்களை அணிய வேண்டும்’ என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் நீடிக்கிறது.

பல இடங்களில் அபாயகரமான நிலைக்கும் சென்றுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த, டில்லி அரசு மற்றும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த, 1ம் தேதி முதல் டில்லியில் குளிர்கால காற்று மாசு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல், டீசலில் இயங்கும் வெளிமாநில வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்டுதல் மற்றும் கட்டடங்களை இடிக்கும் பணிக்கும் அனுமதி இல்லை.

சாலைகளில் வாகன பயன்பாட்டை குறைக்க, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, ‘ஆன் – லைன்’ வாயிலாக வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்று மாசில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள, டாக்டர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

காலை மற்றும் மாலை நேர நடைப் பயிற்சிக்கு பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சிகளை வீட்டுக்குள்ளேயே செய்து கொள்ள வேண்டும். வீடுகளில் காற்று சுத்திகரிப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.

குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சுவாசப் பிரச்னை, இதய நோய், சிறுநீரகக் கோளாறு இருப்போருக்கு, காற்று மாசால் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மெதாந்தா மருத்துவமனை சுவாச மற்றும் துாக்க மருத்துவப் பிரிவு நிபுணர் அபினவ் பானோட், இது தொடர்பாக கூறியதாவது:

மூக்கு மற்றும் வாயை முழுமையாக மறைக்கும் வகையில், சரியாக பொருந்தக்கூடிய முகக்கவசங்களை டில்லிவாசிகள் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி வந்த பின், பொது வெளியில் உடற்பயிற்சி செய்யலாம். அதற்கு முன் அதிகாலை நேரத்தில், பொதுவெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில்தான் காற்றில் அதிகளவில் மாசு நிறைந்திருக்கும்.

காற்று மாசு அபாயகரமான நிலையில் இருக்கும் நாட்களில், வெளியில் நடமாடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். காற்று தரக்குறியீடு, 200-க்கு கீழே இருந்தால், வெளியில் செல்லலாம்.

அதேபோல, வீட்டுக்குள் குழந்தைகள் மற்றும் முதி யோர் இருக்கும் அறைகளில், தரமான காற்று சுத்திகரிப்பான் கருவிகள் பொருத்த வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை நிற காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவு மற்றும் சுவாச மற்றும் துாக்க மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியதாவது:

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால், காற்றில் கலந்துள்ள துாசி வளிமண்டலத்தில் பரவி செல்ல முடியாமல், தரைக்கு அருகிலேயே தங்கி விடுகின்றன. அந்தக் காற்றை சுவாசிக்கும் போது, துாசு துகள்கள் உடலுக்குள் புகுந்து விடுகின்றன.

முதியோர், குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக கோளாறு போன்ற உடல்நலப் பாதிப் புகள் உள்ளவர்கள், இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்படுவர். தீபாவளி பண்டிகைக்கு முன்பே டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

தீபாவளி நாளில் அதிகளவில் பட்டாசுகள் வெடித்ததாலும், உறவினர்களை சந்திக்கவும் பரிசுகளை வழங்கவும் மக்கள் வாகனங்களில் அதிக அளவில் பயணம் செய்ததாலும் காற்று மாசு அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது.

அதனால், முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க முயற்சி செய்ய வேண்டும். மூடுபனி, புகைமூட்டம் மற்றும் காற்றின் தரக் குறியீடு மோசமாக இருக்கும் காலங்களில், மக்கள் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முடிந்தால் வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள். வெளியில் நடைப்பயிற்சி செய்வதையோ, ஓட்டப் பயிற்சி செய்வதையோ தவிர்க்க வேண்டும்.

நீண்டகால சுவாச பிரச்னை மற்றும் இதய நோயாளிகள், தங்களுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு இறுக்கம், அதிக சோர்வு அல்லது மந்தநிலை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காற்று மாசு மிக மோசம்


தீபாவளி பண்டிகைக்கு பின், தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் டில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் நேற்று காலை, 9:00 மணிக்கு காற்றின் சராசரி தரக்குறியீடு, 303 ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us